தினம் ஒரு பாசுரம் - 69
தினம் ஒரு பாசுரம் - 69
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே,
கொடியா அடு புள் உடையானே கோலக் கனிவாய்ப் பெருமானே,
செடியார் வினைகள் தீர்மருந்தே திருவேங்கடத்து எம்பெருமானே,
நொடியார் பொழுதும் உன் பாதம் காண நோலாது ஆற்றேனே
-- நம்மாழ்வார் (திருவாய்மொழி)
திருவேங்கடவன் திருவடிப் பற்றல் பாசுரங்கள் தொடர்கின்றன.
பொருளுரை:
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே - அடியவனான நான் அணுகி அனுபவிக்கும் அமுதமே
இமையோர் அதிபதியே - வானவர் தலைவனே
கொடியா அடு புள் உடையானே - உன் திருக்கொடியாக (பகையை) அழிக்கும்/பொசுக்கும் கருடனைக் கொண்டவனே
கோலக் கனிவாய்ப் பெருமானே- அழகிய கனி நிகர் அதரம் உடையவனே
செடியார் வினைகள் தீர்மருந்தே - செடி போல (அடர்ந்து வளரும்) பாவங்களை ஒழிக்கும் மருந்தானவனே
திருவேங்கடத்து எம்பெருமானே - திருமலையில் எழுந்தருளியிருக்கும் அண்ணலே
உன் பாதம் காண - உன் திருவடியைக் காண்பதற்காக
நொடியார் பொழுதும் - ஒவ்வொரு நொடிப்பொழுதும்
நோலாது ஆற்றேனே - நோன்பு எதுவும் மேற்கொள்ளாத நான், பொறுக்க மாட்டாது தவிக்கிறேனே
பாசுரக்குறிப்புகள்:
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே - முன் எழுதிய பாசுர இடுகைகளில் ஆழ்வார் அருளிய "சென்று சேர், அமர்ந்து புகுந்தேனே" போன்றதே தான் "மேவி அமர்கின்ற" என்பதும். "மேவுதல்" என்பதற்கு நேர்ப்பொருள் "தங்குதல்". உள்ளர்த்தமாக மெய் ஒழுக்கம் சார்ந்த நன்னெறி / புலனடக்கம் எனலாம். அதைக் கைக்கொண்ட பின்னரே "அமர்தல்" என்ற உள்ளம் (ஆன்மா) சார்ந்த அடிப்பற்றுதல் (சரணாகதித்துவம்).
அமுதம் சாகா வரம் தரும் மருந்து. பெருமாளை அமுதம் என்கையில், அவனைப் பிறப்பறுக்கும் "மருந்தாக", பரமபதத்தை/பேரின்பத்தை அருளுபவன் என்று கொள்வது சரியானதே. இதன் வாயிலாக ஆழ்வார் பரமனின் வாத்சல்ய (பேரன்பு) குணத்தைப் போற்றுவதாகச் சொல்லலாம்.
இமையோர் அதிபதியே - அமுதம் என்றழைத்தவுடன், தேவர்கள் நம் ஆழ்வார் மனத்து வர, "இமையோர் அதிபதியே" என்று திருமாலின் சுவாமித்துவ (இறைத்தலைமை) குணத்தைப் போற்றுகிறார். மேலும், திருநாடான வைகுந்தத்தில் இமையவருக்குக் கிட்டும் இறை அனுபவத்துக்கு ஈடான ஒன்றை தான் பூவுலக வாழ்விலேயே அனுபவிப்பதை ஆழ்வார் குறிப்பதாகக் கொள்வது ஒரு நயம் சார் கருத்தே.
கொடியா அடு புள் உடையானே -
"அடு புள்" = (பகையை) அழிக்கும் பறவை (கருடன்)
இதை, ஐம்புலன்கள் சார் சிற்றின்ப ஆசைகளை பொசுக்கும் வல்லமைக்குக் குறியீடாகக் கொள்ளலாம். அத்தகைய வல்லமையுடைய "பெரிய திருவடி" ஆகிய கருடனை எம்பெருமான் ஆனவன் தனது திருக்கொடியாக வைத்திருப்பவன்.
மற்றொரு பாசுரத்தில் "உள் நிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்" என்று தானே ஐம்புலன்களால் பெரும் அவதியுறுவதாக (ஆழ்வார்களில் தலையாய) நம்மாழ்வாரே அருளியிருக்கையில், பொருளாசையே பிரதானமாக இருக்கிற தற்காலச்சூழலில், நாமெல்லாம் எம்மாத்திரம்?!
அதோடு, அக்கருடன் மீதேறி விரைந்து சென்றுத் தானே "ஆதிமூலமே" என்று அலறிய யானைக்கு வரதன் அபயம் அளித்தான். ஆக, பரந்தாமனின் "சௌசீல்யம்" (உயர்வு/தாழ்வு பாராமல் காத்தருளும் குணம்) இங்கு வெளிப்பட்டது!
கோலக் கனிவாய்ப் பெருமானே - பல பாசுரங்களில் ஆழ்வார், திருமாலின் திருவாயை தாமரை மலருக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார், அதன் மென்மைக்காகவும், சிவந்த நிறத்திற்காகவும். இங்கு கனியுடன் அதரங்களை ஒப்பிடுவது, பரமனது இனிய, குழைந்த புன்முறுவலை எடுத்துக் காட்டவே. புன்னகையுடன் கூடிய, எளிமைத்தன்மையுடன் அடியவர்க்கு மனம் இரங்கும் கல்யாண குணமான "சௌலப்யத்தை"க் குறிப்பதாகச் சொல்லலாம் தானே!
கண்ணபிரானாக, பாஞ்சாலி, குசேலன், குந்தி, பீஷ்மர், கர்ணன் என்று பலருக்கு சௌலப்யம் காட்டியிருக்கிறான். ஆக, முதல் 2 வரிகளில் பரந்தாமனது 4 முக்கியமான கல்யாண குணங்களையும் ஆழ்வார் உணர்த்தி விடுகிறார்.
செடியார் வினைகள் தீர்மருந்தே - செடி போல அடர்ந்து படர்ந்து வளரும், துன்பம் தரும் வினைகளை ஒழிக்கும் பெரு மருந்து, அர்ச்சாவதாரமாக எழுந்தருளியுள்ள, திருமலை உறை நாதனே என ஆழ்வார் அறுதியிட்டு அருளுகிறார். பாவங்கள் ஒழிந்தால் தானே பரமபதம் கை கூடும்! (திருமழிசைப்பிரானின் "விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய் பண் கடந்த தேசமேவு பாவ நாச நாதனே" என்ற முன் எழுதிய இடுகையின் பாசுர வரிகளை நினைவு கூர்க)
நொடியார் பொழுதும் உன் பாதம் காண நோலாது ஆற்றேனே - "இப்படி கல்யாண குணங்களைக் காட்டியும், தீவினையைப் போக்க வல்ல மருந்தாகவும் விளங்கும் எம்பிரான் உன் திருவடியைக் காண வேண்டி, நோன்பு எதுவும் மேற்கொள்ளாத அடியேன் ஒவ்வொரு நொடியும் கிடந்து துடிக்கிறேன்" என்று மருகுகிறார் ஆழ்வார். இதை வேறு விதமாகவும் நோக்கலாம்: "நான் ஒரு நொடிப் பொழுதும் நோன்பிருக்காமலேயே உன்னைக் காண ஏங்கித் தவிக்கிறேன்".
எப்படி பொருள் கொண்டாலும், இதன் சாரம் ஒன்று தான். நோன்பு இருந்து, பூசைகள் செய்து வாழும் அடியார்களின் ஆற்றாமைக்கு சற்றும் குறைந்ததல்ல தனது ஆற்றாமை என்று ஆழ்வார் குறிப்பில் உணர்த்துகிறார். இதில் நம்பிக்கை தரும் அருட்செய்தியும் உள்ளது. "ஞான அனுட்டானங்கள் முக்கியமில்லை. அவனை அடைய பரமபக்தி ஒன்றே போதும். அம்மாயவனைக் கட்டி இழுக்க, பக்தி யோகமானது ஞான யோகத்தைக் காட்டிலும் சிறந்தது" என்பதை ஆழ்வார் வாக்காக நாம் கொள்வோம்.
திருவேங்கடவன் திருவடிகளே சரணம்!
---எ.அ. பாலா
0 மறுமொழிகள்:
Post a Comment